‘‘சீனா இலங்கையை மறந்துவிடலாம்..” : விடுக்கப்பட்ட புதிய எச்சரிக்கை

 

 நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். பட்டலந்த ஆணைக்குழுவின் 25 வருட பழமையான அறிக்கை குறித்து பேசுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால் நடந்து கொண்டிருக்கும் உலகளாவிய விவகாரங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. பாராளுமன்றம் அதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்த அவர்,

 
இலங்கை தனது எதிர்காலத்தைப் பாதுகாக்க விரைவான பொருளாதார வளர்ச்சியையும் துணிச்சலான சீர்திருத்தங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடைவதற்கு சீர்திருத்தங்கள் தேவையாகும். ஆனால் அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம்  தயாராக உள்ளதா?

மாற்றங்களை ஏற்படுத்தாமல் சர்வதேசத்துடன் இணைந்து பயணிக்காமல் எம்மால் முன்னேற முடியாது. குறிப்பாக இந்தியாவுடன் என்றும் நட்புறவைப் பேண வேண்டியது அத்தியாவசியமானதாகும். எமது அரசாங்கம் உலக சக்திகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பன்முகத்தன்மையை உத்தியாகப் பின்பற்றியது.

அதற்கமைய அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணினோம். சீனாவுடன் சிறந்த உறவு காணப்பட்டது. அந்த உறவு விரிசல் இன்றி தொடர்ந்தமையால் அம்பாந்தோட்டை துறைமுகம், துறைமுக நகரம் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் ஸ்திரமாகக் காணப்பட்டன. இலங்கை அபிவிருத்தியடையாவிட்டால் இந்த திட்டங்களால் சீனாவுக்கு இலாபம் பெற முடியாது.

எனவே இந்த முதலீடுகளின் வருமானத்தை உறுதி செய்ய இலங்கை கணிசமாக முன்னேற வேண்டும். தற்போதுள்ளதை விட 5 மடங்கு வளர்ச்சியடை வேண்டும். நாம் பத்து மடங்கு வளர்ந்தால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள், ஏனெனில் அவர்களின் வேலைத்திட்டங்களில் வருமானமும் விரைவாக உயர்வடையும்.
சீனா நமக்கு உதவ தயாராக உள்ளது. ஆனால் நாம் வளரவில்லை என்றால், அவர்கள் எம்மை மறந்துவிடுவார்கள். சீனாவும் இந்து சமுத்திரத்துக்குள் ஒரு பாரிய பொருளாதாரத்தை உருவாக்கப் போகிறது. நாமும் அதில் ஒரு பகுதியாகவும் இருக்க வேண்டும்.

இந்தியாவின் அபிவிருத்தியை அங்கீகரிக்கும் அதேவேளையில், இலங்கை இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் பொருளாதார அபிலாஷைகளுடனும் தன்னை ஒருங்கிணைக்க வேண்டும். இந்தியாவைத் தொடர்ந்து சீனா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகியவை வளர்ச்சியடையும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான பிராந்திய வல்லரசாக அவுஸ்திரேலியாவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. இவ்வாறு சர்வதேசத்தின் நகர்வுகளுக்கமைய எனது பதவிக் காலத்தில்ஸ இதற்கான கட்டமைப்பு வகுக்கப்பட்டுள்ளது. அவை தொடருமா இல்லையா என்பதுதான் கேள்வி.

ஒரு நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் நான் எனது நிலைப்பாட்டை விசேட அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்திருக்கின்றேன். அதில் கூறப்பட்டதைத் தவிர வேறு எதுவும் கூறுவதற்கில்லை.
உண்மையில் அது 25 வருட பழமையான அறிக்கையாகும். எனவே அந்த அறிக்கை குறித்து பேசுவதில் எனக்கு இப்போது ஆர்வம் இல்லை. ஆனால் நடந்து கொண்டிருக்கும் உலகளாவிய விவகாரங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. பாராளுமன்றம் அதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றார்.